Monday, February 23, 2015

சுருட்டு பிடிக்கும்போது தியானம் செய்யலாமா? கலையுணர்வு தேவை

ஒரு ஜென் குருவிடம் பயின்ற இரண்டு சீடர்கள் அந்த குருவின் வீட்டுத் தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். அவர்கள் காலையும் மாலையும் நடைப்பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்பது குருவின் கட்டளை. 

நடைப்பயிற்சியும் தியானத்தில் ஒருவகையாக இருந்தது. நடைத்தியானம் அது. உங்களால் இருபத்தி நான்கு மணிநேரமும் அமர்ந்திருக்க இயலாது. கால்களுக்குக் கொஞ்சம் அசைவு தேவை. ரத்த ஓட்டம் சீராகும். ஜென் பவுத்தம் , சூஃபிசம் இரண்டிலும் சில மணிநேரங்கள் அமர்ந்து தியானம் செய்த பின்னர், நடைத்தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தியானம் தொடர்கிறது. நீங்கள் நடந்துகொண்டிருக்கலாம், உட்காரலாம். உங்களுக்குள் ஆற்றலின் தன்மை மாறுவதில்லை. 

தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த இரண்டு சீடர்களுமே புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். தங்கள் குருவிடம் புகைபிடிப்பதற்கு அனுமதி கேட்க அவர்கள் நினைத்தனர். தோட்டத்தில் புகைபிடிப்பது அத்தனை குற்றத்துக்குரிய காரியம் ஒன்றும் இல்லை என்று கருதிய அவர்கள் குருவிடம் அடுத்தநாள் புகைபிடிப்பதற்கான அனுமதியைப் பெறவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டனர். 

மறுநாள் மாலை இரு சீடர்களும் தோட்டத்தில் சந்தித்துக்கொண்டனர். ஒரு சீடன் கையில் சுருட்டு இருந்தது. புகைத்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த இன்னொரு சீடனுக்குக் கடுமையான கோபம் உண்டானது. “ என்ன ஆனது? நானும் புகைபிடிப்பதற்கு அனுமதி கேட்டேன். அவரோ நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். அவர் அனுமதி இல்லாமல் நீ எப்படி புகைபிடிக்கிறாய்?” என்று கோபத்துடன் கேட்டான். 

அந்த சீடனோ குருவின் சம்மதத்துடனேயே புகைபிடிப்பதாகக் கூறினான். 

இது என்ன அநியாயம் என்று முதல் சீடனுக்குத் தோன்றியது. “ உடனடியாகப் போய் ஏன் உனக்கு மட்டும் அனுமதி கிடைத்தது என்று கேட்கப் போகிறேன்” என்றான். 

கோபத்தில் இருந்த சீடனைப் பார்த்து அனுமதி பெற்ற சீடன், “ ஒரு கணம் பொறு. நீ குருவிடம் என்ன கேட்டாய் என்பதை மட்டும் சொல்” என்றான். 

சீடன் பதில் சொன்னான். “தியானம் பண்ணும்போது புகைபிடிக்கலாமா என்று கேட்டேன். அவர் கூடாது என்று சொன்னார்” என்றான். 

அதைக் கேட்டு புகைபிடித்துக் கொண்டிருந்த சீடன் விழுந்து விழுந்து சிரித்தான். “ இப்போது எனக்கு விஷயம் புரிகிறது. சுருட்டு பிடிக்கும்போது தியானம் செய்யலாமா? என்று கேட்டேன். அவர், பிடிக்கலாம் என்று அனுமதி கொடுத்தார்” என்றான். 

இரண்டு கேள்விகளுக்கும் சின்ன வித்தியாசம் தான். ஆனால் இந்தச் சின்ன வித்தியாசத்தில் வாழ்க்கை வேறுவிதமாகி விடுகிறது. 

தியானம் செய்யும் போது புகைபிடிக்கலாமா என்று கேட்கும்போது அது அசிங்கமாக இருக்கிறது. புகைபிடிக்கும்போது தியானத்தில் ஈடுபடலாமா? என்று கேட்கும்போது அதே கேள்வி சரியானதாகிவிடுகிறது. அப்போதாவது நீங்கள் தியானிக்க நினைக்கிறீர்கள் அல்லவா? 

வாழ்க்கை தன்னளவில் துயரகரமானதோ ஆனந்தமானதோ அல்ல. வாழ்க்கை என்பது எந்த ஓவியமும் வரையப்படாத வெறும் கித்தானாக உள்ளது. அவ்வளவுதான். அதை அழகாக்க ஒருவர் கலையுணர்வு மிகுந்தவராக இருக்க வேண்டும். 

ஓஷோவின் இந்தக் கதை வழ்க்கையிலிரிந்து எதை எடுத்துக்கொள்வது, எப்படி என்றைக் கேட்பது என்பதைக் கூறிகிறது. புகைபிடிப்பதை ஊக்கிவிக்கவில்லை. 


நன்றி: தி இந்து

No comments:

Post a Comment