Wednesday, August 12, 2015

தேசிய நூலகர் தினம் - ஆகஸ்ட் 12

"இந்திய நூலகத் தந்தை' என போற்றப்படும் டாக்டர். எஸ்.ஆர். ரங்கநாதன் பிறந்த தினமே தேசிய நூலகர் தினமாக (National Librarians Day) கொண்டாடப்படுகிறது.
 
தமிழக அரசின் பொது நூலகத் துறை மற்றும் ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நூலகர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
 
நூலகத்துக்கு சென்று படிக்கும் பழக்கத்தை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வு தினமாக இது அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்கள் மற்றும் நாட்டின் முக்கிய நூலகங்களில் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது.
 
எஸ்.ஆர். ரங்கநாதன் வாழ்க்கை வரலாறு:
 
சீர்காழி அருகே உள்ள வேதாந்தபுரம் கிராமத்தில் பிறந்தவர் திரு. எஸ்.ஆர். ரங்கநாதன். நூலகத் துறைக்கு ஆற்றியுள்ள சிறப்புமிக்க பங்களிப்புக்காக அவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 12- ஆம் தேதியை தேசிய நூலகர் தினமாக மத்திய அரசு அறிவித்தது.
 
1892 ஆகஸ்ட் 12 ஆம் தேதி ராமாமிர்த்த ஐயருக்கும் சீதாலட்சுமி அம்மையாருக்கும் புதல்வராக ரங்கநாதன்  பிறந்தார். 1921 ஆம் ஆண்டு கணிதத் துறை உதவிப் பேராசிரியராகச் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியைத் தொடங்கினார், திரு. ரங்கநாதன்.
 
1924 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் நூலகரானார். இவரே, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகர். நூலகத் துறைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இங்கிலாந்து சென்று நூலக அறிவியலில் பயிற்சி பெற்றார்.
 
கோலன் பகுப்பு முறை..!
 
புத்தகங்களைப் பொருள் (அர்த்தம்) வாரியாகப் பிரித்து அடுக்குவதற்காகக் "கோலன் பகுப்பு முறை' என்னும் பகுப்பு முறையைக் கண்டுபிடித்தார், திரு. ரங்கநாதன். இவர் ஆராய்ந்து கண்டுபிடித்த இந்த முறை, நூலகத் துறையைச் சார்ந்த பல மேனாட்டு அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதுவரை கையாளப்பட்டுவந்த பகுப்பு முறையைக் காட்டிலும் கோலன் பகுப்பு முறை எளிமையாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருந்ததால் பல நாட்டு நூலகங்களில் இம்முறையிலேயே நூல்கள் பிரித்து வைக்கப்பட்டன. .
 
கோலன் பகுப்பு முறை பல்வேறு வகைப்பட்ட பொருள்களில் எழுதப்பட்ட நூல்களைப் பிரித்து, நூலகத்தில் அந்தந்தப் பொருளுக்குரிய நூல்களை அந்தந்த இடத்தில் வைக்க வசதியாக இருந்தது. இந்தப் பகுப்பு முறை நூலகத்துக்கு வரும் வாசகர்கள் தாங்கள் விரும்பும் நூல்களை எளிதில் எடுத்துப் படிக்கவும், படித்து முடித்த பின் அந்தந்த நூலுக்குரிய இடத்தில் நூலகர் அடுக்கி வைக்கவும், நூற்றொகை தயாரிக்கவும் உதவியாக இருந்தது.
 
நூலகர் திரு. எஸ்.ஆர். ரங்கநாதனின் கண்டுபிடிப்பான கோலன் பகுப்பு முறையில் நூலகப் பொருள் பட்டியல் தயாரிப்பதும், அதனை நூலகர்களும், வாசகர்களும் பயன்படுத்துவதும் எளிதாக இருந்தது. தமிழக அரசின் பொது நூலகத் துறை நூலகங்களில் இப்பகுப்பு முறையில்தான் நூல்கள் பொருள் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
 
இந்தியாவின் இதர பகுதிகள், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்கள் இந்தக் கோலன் பகுப்பு முறையைத்தான் இன்றும் பயன்படுத்துகின்றன.
 
நூலக மாதிரி சட்டம்..!
 
நூலக அறிவியல் பற்றி பல நூல்களை எழுதியதோடு, பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். 1939 ஆம் ஆண்டு நூலக மாதிரி சட்டத்தை இயற்றினார்.  1948 ஆம் ஆண்டில் இவருடைய முயற்சியால்தான் சென்னை பொது நூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி உள்ளாட்சி நிறுவனங்கள் வசூல் செய்யும் சொத்து வரியில் (பிராபர்ட்டி டேக்ஸ்) 10 சதவிகிதம் நூலகத் துறைக்கு வழங்கப்படுகிறது.
 
பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நூலகராகவும், டெல்லி நூலகத் துறையின் தலைவராகவும் பணியாற்றிய திரு. ரங்கநாதன், ரஷியா, கிழக்கு ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று நூலகம் தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
 
புதுடெல்லியில் உள்ள நூலகத் தரக் குழுவின் தலைவராகவும் இருந்தார். நூலக அறிவியல் தொடர்பான இதழின் பதிப்பாசிரியராகவும், டி.ஆர்.டி.சி. நூலக ஆராய்ச்சியின் சிறப்பாசிரியராகவும் பணிபுரிந்தார்."
 
Source : http://www.nithimuthaleedu.com/2012/08/12.html#.VcrDHk8VhLM

No comments:

Post a Comment