Friday, August 23, 2024

உ.வே. சாமிநாதையர் நூலகம் (U.V. Swaminatha Iyer Library), பெசன்ட் நகர், சென்னை

நண்பர்கள் அனைவருக்கும் சென்னை தின வாழ்த்துகள்!

சென்னையில் எனக்குப் பிடித்த நூலகங்களுள் ஒன்று உ.வே. சாமிநாதையர் நூலகம் (U.V. Swaminatha Iyer Library).

2007-ஆம் ஆண்டில் உ.வே. சாமிநாதையர் நூலகத்தில் உள்ள அரிய புத்தகங்களைப் பட்டியலிட்டு ஆவணப்படுத்தும் பணியில் இருந்தேன். பழமையான புத்தகங்களைக் கையாள்வது ஒரு கலை. நான் ஆவணப்படுத்திய ஒவ்வொரு புத்தகமும் இப்பொழுதும் நினைவில் நிழலாடுகிறது. ஒவ்வொரு புத்தகத்தின் தகவல்களும் வரலாற்றுக் காலத்திற்குள் சஞ்சரிக்க வைத்துவிடும்.

அங்கிருந்த பெரும்பாலான பழைய புத்தகங்கள் பூச்சிகளால் தாக்கப்பட்டு, தூசி படிந்திருந்தன. ஆவணப்படுத்துவதற்கு முன் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. இப்புத்தகங்களைக் கையாளும்போது சுவாசக் கோளாறு, கண்களிலும் சருமத்திலும் எரிச்சல் போன்ற பல உபாதைகள் ஏற்பட்டன. எனினும், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்களின் கரங்களில் தவழ்ந்த புத்தகங்களை எனது கரங்களால் தொட்டு ஆவணப்படுத்துகிறோம் என்ற பெருமகிழ்வும், ஆவணப்படுத்துதலில் எனக்கிருந்த அளவற்ற ஆர்வமும் இச்சிரமங்களைப் பொருட்படுத்தாமல் செய்தன.

இந்நூலகத்தின் இயற்கை கொஞ்சும் சூழல் எப்பொழுதும் புத்துணர்ச்சி கொடுத்துக் கொண்டே இருக்கும். இங்கிருக்கும் கடற்கரை மணலில் வெறுங்காலில் நடப்பது ஒரு சுக அனுபவம். நூலகத்தின் உள்ளே இருந்த ஒரு மரத்தில் செழுமையான வெற்றிலைக் கொடி பசுமையாகப் படர்ந்திருக்கும், இங்கிருக்கும் மணலை லேசாகத் தோண்டினால் நன்னாரி வேர்கள் படர்ந்து இருக்கும், அவற்றை எடுத்து தண்ணீர் பாட்டிலில் போட்டு வைத்து அந்த தண்ணீரைக் குடிப்போம் அற்புத சுவையாக இருக்கும்.

பண்டைய இலக்கியங்கள் எழுதப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளை ஊர் ஊராக அலைந்து சேகரித்து அச்சிட்டுப் பதிப்பித்து தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் செழுமையையும் அறியச் செய்தவர் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையர்.

இந்நூலகத்தில் புத்தகங்கள் மட்டுமின்றி செவ்வியல் இலக்கிய சுவடிகள் சமய இலக்கிய சுவடிகள், ராமாயண சுவடிகள் ஓவிய சுவடிகள், என மூவாயிரத்திற்கும் மேலான சுவடிகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இன்று வரை உள்ள பல அரிய நூல்களின் சேமிப்பு கூடமாக இந்த நூலகம் விளங்குகிறது.

உ. வே. சாமிநாதையர் நூலகம் பெசன்ட் நகரில் உள்ள அருண்டேல் கடற்கரைச் சாலை தி பெசன்ட் தியோசாபிகல் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ளது.

இந்நூலகம் குறித்த உங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிருங்கள்!








No comments:

Post a Comment