எனது வாழ்வின் அரிய நிகழ்வு. கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி கலை விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் #Indran Rajendran அய்யா அவர்கள் என்னையும் மற்றும் சில நண்பர்களையும் கரிசல் இலக்கியத்தின் தந்தை, தமிழின் ஆகச்சிறந்த கதைச் சொல்லி எழுத்தாளர் கி. ரா (கி. ராஜநாராயணன்) அய்யா அவர்களை சந்திக்க அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இந்திரன் அய்யாவை தெளிவாக அடையாளம் கண்டு கொண்ட கி.ரா அய்யா “இந்திரன் வாருங்கள்” என்று அழைத்தார். நாங்கள் எங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் முன்னபாகவே அவர் எங்கள் ஒவ்வொருவரின் பெயரையும், பணிகளையும் கேட்டுத் தெரிந்துக் கொண்டார்.
ஏற்கனவே பழகிய நண்பர்களோடு பழகுவதைப்போல மிக இயல்பாக அனைவரிடமும் பேசினார். பேச்சின் இடை இடையே புன்னகத்துக் கொண்டே இருந்தார். அவருக்கு 98 வயது என்பதை கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை சொற்களிலும், நினைவாற்றலிலும் அத்தனை தெளிவு.
இந்திரனின் அய்யாவின் “உலகிலேயே சிறந்த புத்தகத்தை வெளியிட புத்தகத்த பெற்ற அவர் அப் புத்தகத்தின் கவரை பிரித்தார் அது மிக கடினமாக இருந்தது அதை எங்களிடம் கொடுத்து பிரிக்க சொன்னார் எங்களுக்கும் அந்த கவரைப் பிரிப்பது கடினமாகவே இருந்தது.
படுக்கையில் சாய்ந்து படுத்தபடியே புத்தகத்தை வெளியிட்டார். அந்நூலில் ”உலகிலேயே சிறந்த புத்தகம் இதுவரை எழுதப்படாத புத்தகம்தான் “என்று இந்திரன் அய்யா சொன்னவுடன் ரசித்து சிரித்தார். நகைச்சுவை உணர்வுடன் உடனே தன் பக்கத்தில் படுக்கையில் வைத்திருந்த எழுதப்படாத ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து எங்களிடம் கொடுத்து விட்டுச் சொன்னார் “ இது நான் நேற்று எழுதி முடித்த புத்தகம்” என்று சொல்லி சிரித்தார்.
பிறகு மற்றுமொறு நோட்டு புத்தகத்தை காண்பித்தார் அந்த நோட்டு புத்தகத்தில் “கணபதி” என்றோ அல்லது "கணபதியம் என்றோ என்று தலைப்பு கொட்டை எழுத்துகளால் அவரின் அழகிய கையெழுத்தில் எழுதப்பட்டு கீழே சில வரிகள் எழுதப்பட்டு இருந்தன. “கணபதி” என்பது அவரின் மனைவியின் இயற்பெயர் அல்லது அவர் வீட்டார் அழைக்கும் பெயர் என்று நினைக்கிறேன். அவரின் மனைவி குறித்த அவர் எழுத ஆரம்பித்த புத்தகம் அது என்று யூகிக்கிறேன்.
கி. ரா (கி. ராஜநாராயணன்) அய்யா மற்றும் Indran Rajendran அய்யா ஆகியோருக்கு இடையில் ஒரு அற்புத உரையாடல் நடந்ததுக் கொண்டிருந்தது. சளைப்பில்லாமல் ஒருவருக்கொருவர் கதைகளையும், அதன் நுணுக்கங்கள் குறித்தும் பேசிக்கொண்டே இருந்தார்கள். நாங்கள் அந்த கதைகளின் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தோம்.
அருள் வந்த எங்கள் ஊர்க்கார அருளார்களைப் போல அவர்களிடமிருந்து கதைகள் ஊற்றெடுத்துக் கொண்டே இருந்தன.