Friday, August 25, 2023

தூய லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூர், சென்னை வரலாறு - டாக்டர் எச்.கார்த்திபன்

 சென்னை தினம் - சென்னைக்கு வயது 384

சென்னை, பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ளது "தூய லூர்து அன்னை திருத்தலம்" (Our Lady of Lourdes Shrines). தமிழகத்தில் வேறெங்கும் காணப்படாத வகையில், கீழ்த்தளம், மேல்தளம் என இரண்டடுக்கு கொண்ட ஆலயமாக இது கட்டப்பட்டுள்ளது. பெரம்பூர் பகுதி ஒரு காலத்தில் ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் அடையாளமாக இருந்தது. இன்றும் இச்சமுகத்தைச் சேர்ந்தவர்கள் இத்திருத்தலத்தில் பெருமளவில் கூடுகிறார்கள்.

1800-களில், சென்னை வேப்பேரி புனித அந்திரேயா ஆலயப் பங்கின் ஒரு பகுதியாக, பெரம்பூர் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த ஆலயத்தின் பங்குத்தந்தை ஹென்னசே, 1879-ஆம் ஆண்டு பெரம்பூரில், 'லூர்து அன்னை' பெயரில் சிற்றாலயம் ஒன்றைக் கட்டியெழுப்ப முயற்சி எடுத்தார். 1880-ல் சிற்றாலயம் புனிதம் செய்யப்பட்டதை அடுத்து, வேப்பேரி பங்கின் கிளைப்பங்காக பெரம்பூர் மாறியது. பெரம்பூரில் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், 'லூர்து அன்னை ஆலயம்', 1903-ஆம் ஆண்டு தனிப்பங்காக உருவெடுத்தது.

#Chennai_384 #Chennai_day #Madras_Day#Madrasday2023#MadrasDay#celebrate_chennai_day#ChennaiDay#chennai#singarachennai #nammachennai#LourdesShrinePerambur #OurLadyofLourdes #PeramburHistory #SacredSanctuary #DivineHeritage#மெட்ராஸ் டே #சென்னை தினம்#சென்னை, #வடசென்னை, #சென்னை #சென்னை, #வடசென்னை, #சென்னை வரலாறு #பெரம்பூர் #தூய லூர்து அன்னை திருத்தலம்





கோழி மார்கெட் என்கிற மஸ்கான்சாவடி சந்தை, பிராட்வே, சென்னை - டாக்டர் எச்.கார்த்திபன்

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என்பது தான் இந்த சந்தையின் அடையாளம்.

சென்னை, பிராட்வேயின் மத்தியில் இருக்கிறது அம்மன் கோவில் தெரு இதன் இரண்டு பிரதான தெருக்களை இணைக்கும் ஒற்றைச் சாலை தான் கோழி மார்கெட் என்று அழைக்கப்படுகிற மஸ்கான் சாவடி சந்தை.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி 12 மணிக்குள்ளாகப் பலர் இந்தத் தெருவில் கூடி பந்தயங்களுக்கென்றே பழக்கப்பட்ட ஓமர், சாதா, சப்ஷா, கிறிசில், ஆடல் புறாக்கள். பல வகை வகையான வளர்ப்புப் பறவைகள், வண்ண மீன்கள், கோழிகள், முயல்கள், கூண்டுகள், தீனிகள் போன்றவற்றை விற்பனை செய்கிறார்கள்.
பிரிட்டிஷ் காலத்தில், ஆங்கிலேயர்கள் தங்களின் கோழி இறைச்சி தேவைகளுக்காக இந்தச் சந்தையை உருவாக்கியிருக்கிறார்கள். சென்னையின் பல பகுதிகளிலிருந்து மக்கள் இந்தச் சந்தைக்கு வந்து கோழிகளை விற்றுச் செல்வார்களாம். கோழிச்சந்தையாக இருந்த இந்தச் சந்தை இப்போது வளர்ப்புப் பிராணிகள் சந்தையாக மாறியிருக்கிறது.
சென்னையில் பணிபுரிந்த சில ஆங்கிலேயே அதிகாரிகள், புறா வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பகுதிக்கு வந்து, புறாக்களைப் பறக்க விட்டு பந்தயம் நடத்தியிருக்கிறார்கள். அதைப் பார்த்து அப்பகுதி மக்களும் புறாவுக்கு ரசிகர்கள் ஆகி இருக்கிறார்கள். இன்றும், வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது புறா வளர்ப்பும், பந்தயமும்.
#Chennai_384 #Chennai_day #Madras_Day#Madrasday2023#MadrasDay #celebrate_chennai_day#ChennaiDay#chennai#singarachennai #nammachennai #மெட்ராஸ் டே #சென்னை தினம்#சென்னை, #வடசென்னை, #சென்னை #சென்னை, #வடசென்னை, #சென்னை வரலாறு #பிராட்வே, மன்னடி#கோழி மார்கெட், #மஸ்கான்சாவடி சந்தை, #பழமையான மார்கெட், #செல்லப்பிராணிகள் #புறா #புறா பந்தயம்








இராமலிங்க சாமி கோயில் என்கிற திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருக்கோயில், வியாசர்பாடி, சென்னை - டாக்டர் எச்.கார்த்திபன்

 திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் 1834-ஆம் ஆண்டு தன் பணிரெண்டாம் வயதில் பல மத சயத்தாரோடு சுத்த சன்மார்க்கப் பிரச்சாரம் வியாசர்பாடியில் செய்துவிட்டு இரவு நேரத்தில் வரும் பொழுது ஒரு பெரிய சர்ப்பம் வேகமாக வந்து இராமலிங்க அடிகளாரின் முன் படமெடுத்து ஆடியுள்ளது. அதைப் பார்த்த அன்பர்கள் அனைவரும் அது இராமலிங்க அடிகளாரைத் தீண்ட வருகிறது என்று எண்ணி அதைத் தாக்க முயற்ச்சித்துள்ளார்கள் ஆனால் இராமலிங்க அடிகளார் அவர்களைப் பார்த்து அது என்னைத் தீண்ட வரவில்லை அது முன் ஜென்மத்தில் செய்த பாவத்திற்காக மன்னிப்பு கேட்டு ஆன்மப் பூரணச் சுகம் அடைய வந்துள்ளது என்று கூறியுள்ளார். அந்தச் சர்ப்பம் இராமலிங்க அடிகளாரின் திருவடியை மூன்று முறை வலம் வந்து புண்ணியம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு நடந்த இடத்தில்தான் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயில் சென்னை தங்கசாலை (மிண்ட்) பேருந்து நிலையத்திலிருந்து வியாசர்பாடி செல்லும் வழியில், பேசின் பிரிட்ஜிலிருந்து இறங்கும் சாலையில், மேம்பாலத்திற்குக் கீழே இடதுபுறம் செல்லும் சர்வீஸ் சாலையிலேயே அமைந்திருக்கின்றது.

காணொளி: https://youtu.be/niM9opOHSdU

வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு இன்று வயது 384 - டாக்டர் எச்.கார்த்திபன்

ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் (தோற்றுவித்த ஆண்டு 1914), வடசென்னை, வியாசர்பாடி- வரலாறு.

தமிழகத்தில் உள்ள மடங்களை பொதுவாக இரண்டு பெரும் பிரிவாக பிரிக்கலாம். ஒன்று, பிராமண மடங்கள். இரண்டாவது பிராமணரல்லாத மடங்கள்.

பிராமணர் அல்லாதவர்கள் வேதங்களை ஓதக் கூடாது என்றும், சமஸ்கிருதம் தவிர வேறு மொழிகளில் அவற்றை வழங்கக் கூடாதென்றும் கடும் கட்டுப்பாடுகள் அந்தக் காலத்தில் இருந்துள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வியாசர்பாடி கரபாத்திர சிவப்பிரகாச சுவாமி மடம், சூளை ஈசூர் சச்சிதானந்த சுவாமி மடம், பெரம்பூர் வீர சுப்பையா சுவாமி மடம், வண்ணை நாராயண தேசிகர் மடம் போன்ற பிராமணர் அல்லாத மடங்கள் தமிழ் குருகுல மரபு முறையில் செயல்பட்டு, பல்வேறு மொழிகளில் வெளியாகிய வேதாந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து, பல்கலைக்கழகம் போன்று செயல்பட்டுவந்துள்ளார்கள்.

பிச்சை பாத்திரம் ஏந்தி மிக எளிமையாக வாழ்ந்த துறவிகளால் இந்த மடங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் வரலாறு.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் (ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம்) என்பது வடசென்னையில் உள்ள, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள மடாலயம் ஆகும்.

இம்மடாலயத்திலுள்ள கல்வெட்டில் "ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகள் கலியுகாதி 5019-ஆம் ஆண்டு பிங்கள வருடம் பங்குனி மாதம் 22-ம் நாள் (4-4-1918) குருவாரம் உத்திராட நக்ஷ்த்திர நன்னாளில் விதேககைவல்லியம் அடைந்தார்கள் அன்னவர்களின் சமாதி கர்பக்கிரகத்தில் அமைந்துள்ளது. அதன் மீது பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது" என்றும் "ஸ்ரீலஸ்ரீ முத்தானந்த சுவாமிகள் கலியுகாதி 5060-ஆம் ஆண்டு விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 8-ஆம் தேதி (24-10-1958) வெள்ளிக்கிழமை உத்திராட நக்ஷ்த்திர நன்னாளில் விதேககைவல்லியம் அடைந்தார்கள் அன்னவர்கள் சமாதி முன்மண்டபத்தில் அமைந்துள்ளது. அதன்மீது பலீபீடம் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகளின் ஜீவசமாதியின் மீது பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயம்.

சித்தர்களில் ஒருவராக அறியப்படும் ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகள், ‘ஆனந்தாசிரமம்’ என்ற சாது சங்கத்தை இங்கு அமைத்து, பலரது அஞ்ஞானத்தைப் போக்கியிருக்கிறார்.

ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு

திருப்போரூரில் முத்துசாமி பக்தர்- செங்கமலத்தம்மாள் ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் சிவப்பிரகாசம். இவர் சிறு வயதிலேயே சைவ சமயத்தின் பஞ்சாட்சரத்தை உச்சரிப்பதிலும், சிவலிங்கத்திற்குப் பூஜை செய்வதிலும் தன்னுடைய சிந்தனையைச் செலுத்தினார்.

இந்த நேரத்தில் சிவப்பிரகாசத்தின் குடும்பத்தினர் சென்னை நகருக்குக் குடிபெயர்ந்தனர். சைவ ரத்தின தேசிகரிடம் வேதாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். சிறுவயதிலேயே தனிமையை நாடினார். யோக பயிற்சிகளில் ஈடுபட்டு, அவ்வப்போது சமாதி நிலையை அடைந்துவிடுவார். ஒரு முறை அவர் சமாதி நிலையில் இருந்தபோது, அவரது குடும்பத்தினர் சிவப்பிரகாசம் இறந்து விட்டதாகக் கருதினர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் சமாதி நிலையில் இருந்து மீண்ட போதுதான் அனைவருக்கும் உண்மை புரிந்தது.

இவருக்கு 16-ஆவது வயதில் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால் அந்த இல்லற வாழ்விலிருந்து விடுபட நினைத்த அவர், திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதிக்குச் சென்று துறவு கோலம் பூண்டார். அவரை குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீடு வரை வந்தவர், வீட்டிற்குள் செல்லாமல், திண்ணையிலேயே அமர்ந்து கொண்டார்.

தாயார் கொண்டு வந்து கொடுத்த உணவை கரத்தில் பெற்று உண்டார். மூன்று உருண்டை உணவைப் பெற்றுச் சாப்பிட்டவர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். பின்னர் அவர் துன்பங்கள் சூழ்ந்திருந்த இல்லத்திற்குச் சென்று, ஒரு கவளம் உணவை கரத்தில் வாங்கி உண்பார். அதன் மூலம் அந்த இல்லங்கள் சுபீட்சமான வாழ்வை அடைந்தன. கரத்தையே பாத்திரமாக ஆக்கி உணவை வாங்கி அருந்திய காரணத்தால் ‘கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள்’ என்று அழைக்கப்பட்டார்.

திருவான்மியூர், வேப்பேரி, சூளை, செங்கல்வராய தோட்டம் என தனது தவவாழ்க்கையைப் பல இடங்களில் கழித்து வந்த அவர், சாதுக்களுக்காக ஒரு மடத்தை அமைக்க விரும்பினார். இதையறிந்த ஒரு தொண்டா், வியாசர்பாடியில் ஓர் இடத்தை வாங்க உதவி செய்தார். அங்கு சுவாமிகள், ‘ஆனந்தாசிரமம்’ அமைத்தார். அது ‘சாமியார் தோட்டம்’ என்றும் பெயர் பெற்றது.

தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு அவர்களின் துன்பங்களைப் போக்கி வந்த சிவப்பிரகாச சுவாமிகள், தன்னுடைய உடலிலிருந்து ஆன்மாவைப் பிரிக்கும் காலம் நெருங்கியதை உணர்ந்தார். அந்தச் செய்தியை மூன்று நாட்களுக்கு முன்பாகவே தன்னுடைய பக்தர்களுக்கு அறிவித்தார். பின்னர் யோகத்தில் ஆழ்ந்தவர் 4.4.1918-ம் ஆண்டு சமாதி அடைந்தார். அவரது சமாதியின் மீது சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் உருவானது.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், ‘ஆன்ம புராணம்’, ‘தத்துவாத சந்தானம்’ என்ற அத்வைத நூல்களை தமிழில் வெளியிட்டுள்ளார்.

#Chennai_384 #Chennai_day #Madras_Day#Madrasday2023#MadrasDay #celebrate_chennai_day#ChennaiDay#chennai#singarachennai #nammachennai#சென்னை தினம்#சென்னை தின வாழ்த்துகள் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம்i#வடசென்னை#வியாசர்பாடி#வேதாந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு#பிராமணரல்லாத மடங்கள்.