எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு - குறள் -423
இதற்கு, எந்தச் செய்தியை யார் கூறக் கேட்டாலும், கூறியவர் யார் என்று பாராமல் அந்தச் செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும் என்பது பொருள். திருவள்ளுவரின் இந்தக் கருத்துக்கு, எடுத்துக்காட்டாக நரேந்திரன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி இது: சிறுவன் நரேந்திரன் சுறுசுறுப்பானவன், எப்போதும் உற்சாகத்துடன் இருப்பவன். ஓடி விளையாடு பாப்பா! என்று பாரதியார் கூறியதுபோல், விளையாட்டுகளில் நரேந்திரனுக்கு ஆர்வம் அதிகம். நரேந்திரனின் நண்பர்களில் ஒருவனுடைய வீட்டில் ஒரு செண்பகமரம் இருந்தது. நரேந்திரன் தன் நண்பர்களுடன் அங்கு சென்று, செண்பகமரத்தில் ஏறித் தலைகீழாகத் தொங்கி ஆடிக்கொண்டிருப்பான்; அப்படியே குட்டிக்கரணம் போட்டுத் தரையில் குதிப்பான். இந்த விளையாட்டு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. நரேந்திரன் தன் நண்பர்களுடன் அடிக்கடி இப்படி செண்பகமரத்தில் ஏறி விளையாடிக்கொண்டிருப்பதை, அந்த வீட்டிலிருந்த தாத்தா ஒருவர் பார்த்தார்.
அவர், இந்தச் சிறுவர்கள் மரத்தில் இப்படி தலைகீழாகத் தொங்கி விளையாடப்போய், கைகால்களை உடைத்துக்கொண்டால் என்ன செய்வது? நரேந்திரன் விளையாடினால், மற்ற சிறுவர்களும் அவனுடன் சேர்ந்து விளையாடத்தான் செய்வார்கள். எனவே நரேந்திரன் இங்கு விளையாடுவதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே அவர், செண்பகமரத்தில் விளையாடிக்கொண்டிருந்த நரேந்திரனை அருகில் அழைத்தார். நரேந்திரன் அவர் முன்பு சென்று நின்றான். தாத்தா, நரேந்திரா! நீ இப்படி உன் நண்பர்களுடன் இந்த மரத்தில் ஏறி தலைகீழாகத் தொங்கி விளையாடாதே! என்றார். ஏன் விளையாடக் கூடாது? என்று கேட்டான் நரேந்திரன். இவனுக்கு என்ன பதில் சொல்வது? ஏதாவது சொல்லி இப்போது இவனைப் பயமுறுத்தி வைக்க வேண்டும் என்று நினைத்தார் தாத்தா. எனவே அவர், இந்த மரத்தில் ஒரு பூதம் இருக்கிறது! அந்த பூதம் இரவில் வெள்ளையுடை உடுத்திக்கொண்டுச் செல்வதைப் பார்த்தால் பயமாக இருக்கும். அந்த பூதம் மரத்தில் ஏறுபவர்களின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடும்! என்று கூறினார்.
தாத்தா கூறியதைப் பணிவுடன் அமைதியாக இருந்து, நரேந்திரன் கேட்டுக்கொண்டான். தாத்தா, ஒருவிதமாக நரேந்திரனை ஏமாற்றிவிட்டோம்! என்று மனதிற்குள் சிரித்தபடியே அங்கிருந்து சென்றார். தாத்தா அந்த இடத்தைவிட்டு சென்றாரோ இல்லையோ, உடனே நரேந்திரன் மீண்டும் கிடுகிடுவென்று மரத்தில் ஏறி, முன்புபோல் தலைகீழாகத் தொங்கி விளையாட ஆரம்பித்தான். நரேந்திரனின் இந்தச் செயலை, தாத்தா அது வரையில் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த நண்பன் ஒருவன் பார்த்தான். அவன் பதற்றத்துடன், நரேந்திரா! தாத்தா இப்போதுதானே இந்த மரத்தில் ஒரு பூதம் இருக்கிறது என்று சொன்னார்! அது உன் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடப் போகிறது! சீக்கிரம் மரத்திலிருந்து கீழே இறங்கி வந்துவிடு! என்று கூவினான். பயந்து போயிருந்த நண்பனைப் பார்த்து கண் சிமிட்டி கலகலவென்று சிரித்துக்கொண்டே நரேந்திரன், நீ ஒரு முட்டாள்! யாரோ கதை கட்டினால் அதை நாம் நம்பி விடுவதா? தாத்தா நாம் மரத்தில் ஏறக் கூடாது என்பதற்காக அப்படி ஒரு கதை கட்டிவிட்டிருக்கிறார்! நாம் முன்பு எத்தனை முறை இந்த மரத்தில் ஏறித் தலைகீழாகத் தொங்கி விளையாடியிருக்கிறோம்? தாத்தா சொன்னது உண்மையாக இருந்தால், அந்த பூதம் எப்போதோ என் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்குமே! என்று கூறினான்.
நரேந்திரனிடம் துணிச்சலும் இருந்தது, வீரமும் இருந்தது. ஆனால் அவனுடைய துணிச்சலும் வீரமும் எப்போதும் அறிவு சார்ந்ததாகவே இருந்தது. இந்த நரேந்திரன்தான் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் என்று புகழ் பெற்றார். அப்போது அவர் கூறியவை இவை: நாம் எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும், அதன் உள்நோக்கத்தையும் அடிப்படைத் தன்மையையும் கண்டறிய வேண்டும். இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் - முதலில் நீ உன்னிடத்தில் நம்பிக்கை வை. நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து பார்க்க வேண்டும். தனக்கு இறைவன் கொடுத்திருக்கும் அறிவாற்றலைப் பயன்படுத்தாமல், கண்மூடித்தனமாக நம்புபவனை மன்னிப்பதைவிட, தன்னுடைய பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தி நம்பாமல் இருக்கும் ஒருவனை இறைவன் மன்னித்துவிடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
No comments:
Post a Comment